கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க வேண்டும் என்று பல வருடமாக கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் மார்த்தாண்டம் அடுத்த மேல்புறம் அருகே உள்ள வட்டவிளை பகுதியில் உள்ள தோட்டத்து மடம் ஸ்ரீ கிருஷ்ண சாமி கோயில் குளம் அருகே 2007ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் சார்பில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டது.
சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய முக்கிய தினங்களில் இந்து அமைப்பினர் மற்றும் அப்பகுதி உள்ள பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று இந்த சிலையை உடைத்துச் சேதப்படுத்தி உள்ளது. இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
இதனை அடுத்து இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் குவியத் துவங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது . இதனால் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிலையைத் துணியால் மூடிய காவல்துறையினர், சிலை இருக்கும் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது சிலையின் அருகே மதுபாட்டில்கள் கண்டு எடுக்கப்பட்டது. மது போதையில் மர்ம நபர்கள் சிலையை உடைத்துச் சேதப்படுத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் போலீசார் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து அக்கம்பக்கத்திலும் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 15 வருடங்களுக்கு மேலாக அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.