கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளில் இருக்கவும், அவசியமின்றி சாலைகளுக்கு வர வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அநாவசியமாக வெளியில் சுற்றித்திரிபவர்களைக் கண்காணிக்க குமரி மாவட்டத்தில், அனைத்து சாலைகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கோட்டார், வடசேரி, பார்வதிபுரம் மற்றும் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு வரை ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஊரடங்கு தொடங்கியது முதல் இதுநாள்வரை, விதிகளை மீறிய குற்றத்திற்காக 3 ஆயிரத்து 903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வாகனத்தைத் திருடியவர் அடித்துக் கொலை - 4 பேர் கைது!