தென்காசியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தினி என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கீழஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்த ஜூலியன் என்பவர், சாந்தினிக்கு சொந்தமான டிராவல்சில் இருந்து நேற்று சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அந்த காருக்கு கணேசமூர்த்தி டிரைவராக சென்றுள்ளார். டிரைவர் கணேசமூர்த்தி குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள காட்டேஜ் பகுதியில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்த போது காருடன் ஜூலியன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து ஓட்டுநர் கணேசமூர்த்தி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த சூர்யா என்ற கல்லூரி மாணவர் காவல்கிணறு - நாகர்கோவில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மாணவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கார் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து விரட்டி சென்ற காவல் துறையினர் சுமார் 2 கிமீ தொலைவில் சுற்றிவளைத்தனர். பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, குற்றாலத்தில் இருந்து காரை திருடியது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட ஜூலியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் கார் திருடியவர் கைது!