கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு காச நோய் பிரிவு துணை இயக்குநராக மருத்துவர் செந்தில்வேல் முருகன் என்பவர் பணியாற்றினார். இவர் பதவியில் இருந்த போது, அவரை அணுகிய நபர் ஒருவரிடம் பரிசோதனை கூட உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர், செந்தில்வேல் முருகன் அலுவலகத்தை சோதனையிட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், மருத்துவர் செந்தில்வேல் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.