கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவனுக்கு, அப்பள்ளியில் படித்த மற்றொரு மாணவன் குளிர்பானம் கொடுத்ததாக தெரிகிறது.
அந்த குளிர்பானத்தை குடித்த சிறுவனுக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சோதனை செய்ததில் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து நெய்யர்ராங்கரையில் உள்ள மருத்துவமனையில் இரண்டு கிட்டினிகளும் செயல் இழந்து உயிருக்கு போராடி வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
23 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பெங்களூருவில் மனைவியை 15 முறை கத்தியால் தாக்கிய கணவன்.. அதிர்ச்சி சம்பவம்