குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு குளச்சவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் மனைவி சரண்யா (24). சரண்யா இரண்டாவது குழந்தையின் பிரசவத்துக்காக குலசேகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 19ஆம் தேதி மாலை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், சரண்யாவை பரிசோதனை செய்த செவிலியர் காத்திருக்க வைத்துள்ளனர்.
சில மணி நேரத்தில் பிரசவ வலி அதிகரித்ததால், அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் கூறினர். இதையடுத்து, சரண்யா இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தைக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது.
குழந்தை இறப்புக்கு குலசேகரம் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இல்லாததே காரணம் எனக்கூறி சரண்யாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
குலசேகரம் ஆய்வாளர் ராஜசுந்தர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திருப்பியனுப்பினர். மக்கள் புகாரைத் தொடர்ந்து மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ஜான்பிரைட், தக்கலை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜையா ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்து குவிந்த சரண்யாவின் உறவினர்கள், இந்து முன்னணியினர், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலர்களை முற்றுகையிட்டனர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் பிரச்னை முடிவுக்கு வந்தது.