கன்னியாகுமரி: சவுதி அரேபியா நாட்டில் பிளம்பராக உள்ள நுள்ளிகாடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவரது மகன் அஸ்வின்(11) கடந்த செப்.24 ஆம் தேதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத அதேப்பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன் குடிக்கக் கொடுத்த ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளார். சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்படவே, அவரது தாயார் சோபியா செப்.26 ஆம் தேதி களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தொடர்ந்து, சிறுவனுக்கு வாய் நாக்கு உள்ளிட்ட பகுதிகளில்கொப்புளங்கள் ஏற்பட்டதைடக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார், சிறுவனை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை செப்.27 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் போன்ற ஏதோவொரு திரவம் கலந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் படித்த பள்ளியில் இது குறித்து சிசிடிவியை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு சிசிடிவி இணைப்புகள் எலி கடித்ததால் துண்டிக்கப்பட்டு விட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சிறுவன் அஸ்வின் சிகிச்சைப் பலனின்றி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து கடந்த அக்.17 ஆம் தேதி உயிரிழந்தார்.
சிறுவனது உடல், கடந்த அக்.18 ஆம் தேதி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டபோது உடலை பெற்றோர் வாங்க மறுக்கவே, சிபிசிஐடி போலீசார் உடலைப் பெற்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின் சிறுவனின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொள்ள முன் வந்ததைத் தொடர்ந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு சிறுவனின் உடல் இன்று (அக்.22) சிறுவனின் வீட்டின் பின்புறம் சிறுவனின் பாடப்புத்தகங்களுடன் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். பெரும் பரபரப்பையும் பிரச்சினையையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நெல்லை மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், சிபிசிஐடி ஆய்வாளர் பார்வதி ஆகியோர் தலைமையில் சிபிசிஐடி போலீசார் சம்பந்தபட்ட பள்ளி, சிகிச்சை அளித்த மருத்தவமனைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சிசிடிவி ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரி சிறுவன் உயிரிழப்பு; இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை..!