கன்னியாகுமரி மாவட்டம், அருமநல்லூர் அருகேயுள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) பாஜக-வை சேர்ந்தவர். வாக்குப்பதிவையொட்டி, மணிகண்டன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினர், நேற்று மாலை வீரவநல்லூரில் உள்ள ஒரு கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பைக்குகளில் வந்தனர். அப்போது மணிகண்டன் தரப்புக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டனுக்கு ஆதரவாக சதீஷ்குமார் (28), பழனியப்பன் (34), பரமேஸ்வரன் (25), சரவணன் (20) ஆகியோர் தட்டி கேட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மணிகண்டன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த ஐந்து பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டன், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அருமநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(22), பால்மணி(22), கிரியான்(24), ஜெபமணி(45), சஜீன்(20), சிம்சன்(48), சுனில்(32) ஆகிய 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 7 பேரும் உறவினர்கள் ஆவார். இதில் பால்மணி, அமமுக-வை சேர்ந்தவர். சிம்சன் காங்கிரசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.