கன்னியாகுமரி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள பாஜக சார்பில் நடக்கும் 'விஜய யாத்திரா' நிறைவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மார்ச் 7) மாலை கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் விமானம் மூலம் கேரளாவுக்கு நேற்று (மார்ச் 6) இரவு வந்தார்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் 'வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம்' என்ற தலைப்பில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு அவர் வந்தார்.
அங்கிருந்து, கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்றார். அமித் ஷா வருகையை முன்னிட்டு வாழைகள் நட்டு தோரணம் கட்டப்பட்டிருந்ததுடன், தெருக்களில் கோலங்கள் போடப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு பாஜகவினரால் அளிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில், மேள, தாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களுடன் கேரள முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித் ஷா, அருகிலிருந்து வீதிகளுக்கு சென்று துண்டு பிரசுரம் கொடுத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திறந்தநிலை வாகனம் மூலம் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்