பிரதம மந்திரியின் கிசான் வேளாண்மை உதவி திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை குழுவை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "பிரதம மந்திரியின் வேளாண்மை உதவித் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துவருகின்றனர். நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
ஆனால், இந்தத் திட்டத்தில் அரசை ஏமாற்றி சில விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு மோசடி நடைபெற்றுவருகிறது. இந்த வகையில் பல கோடி ரூபாய் மோசடி நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தில் மோசடி குறித்து தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தில் எவ்வளவு ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.