குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டவிளைப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு ஆசிரியருடன் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் ரேஸ் பைக்கில் வேகமாக வந்துள்ளனர்.
பள்ளிக்கு முன் ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் மாணவர்களுடன் அருகிலிருந்த ஆற்றில் விழுந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் விழுந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் இருசக்கர வாகனத்தை மீட்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஆற்று நீருக்கு அடியில் மூழ்கிக் கிடந்த வாகனத்தை கயிறு கட்டி மீட்டனர். குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளியின் முன் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேன் டிரைவரின் சாமர்த்தியம்: உயிர் தப்பிய குழந்தைகள்