வங்கக்கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில், விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்கு அரசு 60 நாட்கள் தடை விதித்து வருகிறது.
அந்த வகையில், குமரி மாவட்டம் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இரண்டு மாதங்கலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்த மீன்பிடி தடைக்காலமானது அங்குள்ள சின்ன மூட்டத்தில் அமலில் இருந்து வருகிறது. இந்த தடைக்காலம் வரும் ஜூன் 15ஆம் தேதி நள்ளிரவு நிறைவுபெறுகிறது.
இந்த நிலையில், மேற்கு கடற்கரைப் பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இணையம், தூத்தூர், நீரோடி உள்பட 40 கடலோர கிராமங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் மீன் பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதையடுத்து ஜூலை 31ஆம் தேதி வரை, இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
தடைக்காலம் உள்ள 60 நாட்களில் குமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது.
இந்த காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது, வலை போன்ற உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.