சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் குமரி பகவதியம்மன் கோவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இங்கு தினந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிறைபுத்தரிசி பூஜை சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களிலிருந்து நெற்கதிர்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பிறகு அந்த நெல்மணிக் கதிர்கள் அங்கு இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு அந்த நெல்மணி கதிர்களை பகவதிஅம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து நெற்கதிர்களை பெற்றுகொண்டனர்.
இதேபோல இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து சமய நிலையத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.