கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசுகிறது. இதனால் கடலில் பலத்த சீற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அடுத்துள்ள அழிகால் கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. வீடுகளுக்குள் புகுந்த ராட்சத அலைகளால் கிராமத்தில் உள்ள வீடுகளில் மணல் குவியல் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகளைக் கண்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளுக்குள் யாரும் நுழைய முடியாத அளவிற்கு கடல் மண் வீடுகளுக்குள் நிரம்பி உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறிய மீனவ மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் உள்ள மண்டபத்தில் தங்கி உள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது நாகர்கோவிலில் தமிழ்நாடு அமைச்சர்கள் இரண்டு பேர் இருந்தும்கூட பாதிக்கப்பட்ட பகுதிக்கு மக்களையும் வந்து பார்க்கவில்லை. இதுவரை மாவட்ட ஆட்சியரும் வந்து பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு தரப்பில் பாதுகாப்பான இடமோ, உணவோ வழங்க யாரும் முன் வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.
2019 - 20ஆண்டுகளில் கடல் அரிப்பு தடுப்புச்சுவருக்கு நிதி ஒதுக்கப்பட்டுப்பணிகள் நடைபெறும் என அன்றைய அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை எனவும்; அந்தப் பணிகள் நடந்து இருந்தால் கூட இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் இப்பகுதி மீனவ மக்கள் தெரிவித்தனர்.
மேலும் அரசு போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைத்து தந்தால் மட்டுமே அழிகால், கிராமத்தைப் பாதுகாக்க முடியும்; இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என அழிகால் கடற்கரை கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுவித்தனர்.
இதையும் படிங்க:குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சூரிய உதயத்தைக் காண முடியாமல் ஏமாற்றம்!