கன்னியாகுமரி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூ சந்தைகளில் ஒன்றாகக் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் பூக்கள் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் உலக வர்த்தக மையமாகத் திகழ்ந்து வருகிறது.
தோவாளை பூ சந்தைக்குப் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்தும் குமரி மாவட்டத்தில் தோவாளை, செண்பகராமன் புதூர், ஆரல்வாய் மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேந்தி பூ, செவ்வந்தி, பிச்சி, மல்லிகை, தாமரை உள்ளிட்ட பூக்கள் அதிகளவு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜையை தோவாளை பூ மார்க்கெட் களை கட்டி உள்ளது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
விலைப்பட்டியல் என்ன?: மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு உயர்ந்து இருந்தது. ரூபாய் 300 முதல் 400க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ கிலோ ரூபாய் 1200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைப் போல், ரூபாய் 250 முதல் 350க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ கிலோ ரூபாய் 1500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தாமரை பூ ஒன்று ரூபாய் 3 முதல் 5க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது, இன்று ரூபாய் 35 முதல் 45க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போன்று, மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ரூபாய் 40க்கு விற்ற கிரேந்தி 110க்கும், வாடாமல்லி ரூபாய் 150க்கும், ரூபாய் 80க்கு விற்ற ரோஜா பூ ரூபாய் 350க்கும், ரூபாய் 30க்கு விற்ற கோழிக் கொண்டை ரூபாய் 60க்கும், ரூபாய் 100க்கு விற்ற சம்பங்கி பூ ரூபாய் 400க்கும், ரூபாய் 100க்கு விற்ற செவ்வந்தி பூ ரூபாய் 300க்கும், ரூபாய் 100க்கு விற்ற அரளிப்பூ ரூபாய் 480க்கும் விலை உயர்ந்துள்ளது.
களைக்கட்டிய விற்பனை: பூக்களின் தேவை அதிகரிப்பால் விற்பனையும் களைகட்டி உள்ளது. ஆயுத பூஜையையொட்டி ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் பூக்கள் வாங்க வருவதால் பிச்சி, மல்லிகைப் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. வழக்கமாகப் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்று தான். மேலும், இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குறீங்களா.. கொஞ்சம் கவனீங்க..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!