கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையில், அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் அறுக்கப்பட்டிருப்பதாக இன்று (நவ. 20) காலையில் தென்தாமரைகுளம் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து காவல் துறையினர் கடையின் மேற்பார்வையாளருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் காவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் மதுக்கடைக்கு வந்து சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, அங்குள்ள மின்விளக்கிற்கான மின்னிணைப்பைத் துண்டித்து, அதிலிருந்து மின்சாரத்தை எடுத்து மதுக்கடையின் முன்பக்க இரும்பு ஷட்டரை கம்பிகளை அறுக்கும் இயந்திரம் கொண்டு அறுத்து கடைக்குள் சென்றது தெரியவந்தது.
மேலும் திருட்டுபோன பொருள்கள் குறித்து கடையின் மேற்பார்வையாளரிடம் விசாரணை செய்ததில் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்றும், ஆனால் 30 ரூபாய் மட்டும் திருடப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து ஷட்டரை அறுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.