கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள கன்னியாகுமரிக்கு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்காக கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் டெண்டர் தனியார் ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் வாகன ஓட்டிகளுக்கும், நுழைவு கட்டண மைய ஊழியர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் கைகலப்பு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீ வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் கார் மூலம் கன்னியாகுமரி வந்துள்ளனர்.
அப்போது விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் சுற்றுலாப் பயணிகளை, நுழைவு கட்டண மைய ஊழியர்கள் கையில் வைத்திருந்த கம்பை கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுவரைத் துளையிட்டு 200 பவுன் நகை கொள்ளை..அரியலூர் போலீசார் விசாரணை