கன்னியாகுமரி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய அரிசி கொம்பன் யானையை தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான பெரியார் புலிகள் காப்பகம் முல்லைக் கொடி பகுதியில் கொண்டு விடப்பட்டது. அது அங்கிருந்து காடுகள் வழியாக சுற்றித் திரிந்து கம்பம் நகருக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மிகுந்த பாதுகாப்புடன் லாரி மூலம் குமரி நெல்லை எல்கையில் உள்ள அப்பர் கோதையாரின் அருகே உள்ள முத்துக்குழி வயல் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விடப்பட்டது.
முத்துக்குழி வயல் குமரி - நெல்லை ஆகிய இரு மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளாக மட்டுமல்லாமல், கேரள காட்டு பகுதியும் இணைந்து உள்ளது. யானையின் கழுத்தில் ரேடியோ காலர் எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டு, யானையின் இருப்பிடம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது. அப்பர் கோதை ஆறு பகுதியில் யானைக்குத் தேவையான தண்ணீர், உணவு வகைகள் ஆகியவை கிடைத்து வருகிறது.
தினமும் யானையை டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், யானை சாப்பிடும் உணவு போன்றவைகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கும் மருத்துவக் குழுவினர், யானையின் சாணத்தை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
யானை ஏற்கனவே இருந்த சீதோஷ்ண நிலையில் இருந்து தற்போது புதிய சீதோஷ்ண நிலைக்கு வந்துள்ளதாகவும், ஆகவே அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதனை மருத்துவக் குழுவினர் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அரிசி கொம்பன் யானையை பற்றிய எந்த தகவலையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளோ, கேரளா மாநில வனத்துறை அதிகாரிகளோ வெளியிடவில்லை. அரிசி கொம்பன் யானை என்ன நிலையில் தற்போது உள்ளது என யானைப் பிரியர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் ஆகியோர் வனத்துறையின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாக்குளத்தைச் சேர்ந்த அரிசி கொம்பன் யானை நலம் விரும்பிகள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், நேற்று (ஜூலை 14) நாகர்கோவில் வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “அரிசி கொம்பன் யானை நெல்லை மாவட்ட வன பகுதியில் விடப்பட்டு, அது பின்னர் குமரி மாவட்ட கோதையாறு வனப் பகுதியில் வந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக யானையின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே அந்த யானைக்கு காலிலும், அதன் தும்பிக்கையிலும் அடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தற்போது உணவு அருந்துகிறதா? எந்த பகுதியில் உள்ளது? என்பது போன்ற விவரங்களை குமரி மாவட்ட வனத்துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த யானையின் நலம் குறித்த விபரங்களை கேரள மாநிலத்தில் 5 லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து கொண்டு இருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு யானை நிலை குறித்து உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
அரிசி கொம்பன் யானையை கேரள மாநிலத்தில் கொண்டு விட வேண்டும் என அங்குள்ள மக்கள் கேரள அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால், அதனை கேரள அரசு செய்யவில்லை. தற்போது கேரள மாநிலத்தில் உள்ள யானைப் பிரியர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளது மாவட்டத்தில் உள்ள யானைப் பிரியர்கள் மற்றும் வன விலங்குகள் ஆர்வலர்களுக்கு இடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.