இந்தியா முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு பச்சை நிறத்தில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் செய்யபட்டு பூஜைகள் நடத்தபட்டன. மேலும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகளை அணிவித்தும், 1008 வடை மாலை அணிவித்தும், லட்டு பிரசாதம் வைக்கப்பட்டும் ஆராதனை செய்யப்பட்டது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, கஸ்தூரி, மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான அபிஷேகமும் நடத்தப்பட்டது.
மாலையில் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை திரவியங்களாலும், மல்லிகை, துளசி உட்பட பல விதமான மலர்களாலும் புஷ்பாபிஷேகமும் நடைபெற இருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: