தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தைச் சேர்ந்த கீரிப்பாறை, காளிகேசம் உள்ளிட்ட ஒன்பது அரசு ரப்பர் கழக தோட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் தோல்வியே அடைந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு நடைபெற்று வருகிறது.
இதனால் கரோனா பாதிப்பு முடியும் வரை ரப்பர் தோட்ட கழக தொழிலாளர்கள் தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரப்பர் தோட்ட கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனவே ஊரடங்கு உத்தரவு, காலவரையற்ற வேலை நிறுத்தம் என கடும் வாழ்வாதார பிரச்னைகளில் சிக்கி அன்றாட வாழ்வுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வரும் சுமார் ஐந்தாயிரம் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வைக் காப்பாற்றும் பொருட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி ஏற்கனவே வேலை செய்த காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஊதிய தொகையை வங்கிகள் மூலமாக வழங்க வேண்டும் என்றும் நிபந்தனையின்றி வாரச்செலவு தொகையும் மாதாமாதம் வழங்குவது போன்று மீதி ஊதிய தொகையையும் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.