கன்னியாகுமரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம்' என்ற தலைப்பில் நாகர்கோவில் இன்று (மார்ச்.7) தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பரப்புரைக்கு வருகிறார். காலை 10.10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு வருகிறார். அங்கிருந்து நேராக 10.25 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து 'வெற்றிக்கொடியை ஏந்தி வெல்வோம்' என்ற தலைப்பில் பாஜக மக்களவை வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வீடுகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து பரப்புரை செய்கிறார். இதையடுத்து 10.45 மணிக்கு செட்டிக்குளம் பகுதியில் இருந்து வேப்பமூடு காமராஜர் சிலை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திறந்தநிலை வாகனத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். அவர் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல, ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலை பிரசாரம் முடிவடைந்த பின்னர் வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தவிட்டு அமித் ஷா உரையாற்றுகிறார். அதன் பிறகு வடசேரி பகுதியில் உள்ள உடுப்பி ஓட்டலுக்குச் செல்லும் அவர், அங்கு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
அமித் ஷா தங்கவிருக்கும் உடுப்பி ஓட்டல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அமித் ஷா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள நிர்வாகிகளுக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து அமித் ஷா நிர்வாகிகளிடம் ஆலோசிக்கவுள்ளார்.
மதியம் 2 மணி வரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா, பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் நல்லது - மக்கள் நீதி மய்யம்