கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் (60). கிணறு தோண்டும் கூலி தொழிலாளியான இவர் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனை முடிவில் இவருக்கு கரோனா உறுதியான நிலையில் கடந்த ஒரு வாரம் முன்பு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் நேற்று(அக்.04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்ய சுகாதார துறை வழிகாட்டுதல்படி சுகாதார துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது குட்டப்பனின் மகன், தனது அப்பாவை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதால் தான் உயிரிழந்து விட்டதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பொன் ஜோஸை திடீரென அருவாளால் வெட்டிவிட்டு, சுகாதார துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இதனால் தலையில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பொன் ஜோஸை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிறகு இறந்த நோயாளியின் உடலை வேறு யாரும் அடக்கம் செய்ய முன் வராத காரணத்தால் பாஜக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சஜு தலைமையில் பாஜகவினர் உடலை அடக்கம் செய்தனர். இதுகுறித்து களியக்காவிளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.