கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி பகுதியில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மயில் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார், சிறப்பு தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.
அப்போது அங்கு வந்த அதிமுக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் தலைமையிலான அதிமுகவினர், திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் மயிலை முற்றுகையிட்டனர். பின்னர், பொதுமக்களின் குறைகளைப் போக்குவதற்காக நடைபெறும் மனுநீதி நாள் குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது என்றும், அலுவலர்கள் முறையாக எந்தத் தகவலும் தெரிவிக்காமல் கண்துடைப்புக்காகக் கூட்டத்தை நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து, புகார் மனு ஒன்றை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர், அடுத்த முறை கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அங்கிருந்த அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: அரசுக் கலைக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய ஷிப்ட் முறை அறிமுகம்!