கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காசியை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காசி பெண் மருத்துவர் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களின் மூலம் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாகப் பழகியது தெரியவந்தது. மேலும், பெண்களுடன் தனிமையாக இருக்கும்போது ரகசியமாக எடுத்த வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடம் காண்பித்து லட்சக்கணக்கில் பணத்தை மிரட்டிப் பறித்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் அவர் மீது இதுவரை சிறுமி உள்பட ஐந்து பெண்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே மூன்று நாள்கள் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்ட காசியை கூடுதலாக சில நாள்கள் விசாரிக்க வேண்டுமென்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மனுத் தாக்கல் செய்ததன் அடிப்படையில், கடந்த 20ஆம் தேதி ஆறு நாள்கள் காவல் துறையினரின் விசாரணைக்காக காசி வெளிவந்தார்.
பின்னர், காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆறாவது நாளான இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் காசி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
காசியின் வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக காவல் துறையினர்களின் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் பரவலாக பேசப்படுகிறது. எனினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுவரை அது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. இது குறித்து, ஏற்கனவே வெளியான தகவல்களையும் அவர் மறுத்துள்ளார். இதற்கிடையே காசியின் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க: ‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம்