கன்னியாகுமரி: குமரி மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(டிச.9) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை மகளிர் அணி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது எனவும், அதிமுக அரசின் சாதனைகளை அனைத்து இல்லங்களுக்கும் மகளிரணி சார்பில் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய விஜிலா, "அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும்.
திமுகவினர் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. ஏனென்றால் அக்கட்சியின் தலைவர் செயல்பட முடியாத நிலையில் உள்ளார். அதிமுக ஆட்சியில் மகளிருக்காக ஜெயலலிதா பல திட்டங்களை வகுத்துள்ளார். திமுக தற்போது உள்ள பெண் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது" என்றார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான் தங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் கெப்சி பாய், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் கவிஞர் சதாசிவம், வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஜெஸீம், ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன், கிருஷ்ணகுமார், தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் அமைச்சர்கள் நிவாரண உதவி