அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் தென்கரை மகராஜன்(45). தோவாளை ஒன்றிய அதிமுக பொருளாளர். இவர், நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் ஆடம்பர பொருட்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார். வழக்கம் போல், நேற்று முன்தினம் (மே 2) இரவு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், வழக்கம்போல நேற்றுகாலை ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த அனைத்து பொருள்களும் அடித்து நொறுக்கப்பட்டும், கடையின் சுவர் உடைக்கப்பட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கடை உரிமையாளர் மகராஜன், கோட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையை அடித்து நொறுக்கியதோடு, கடையினுள் அவரது மகனின் மேற்படிப்புக்காக வைத்திருந்த ரூ.2.63 லட்சத்தையும் எடுத்துச் சென்றதாகக் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.