அதிமுக நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 32ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹரி அஞ்சலி செலுத்தினார். அதேபோல திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பி.எம். நரசிம்மன் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றத்தில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், அம்மா பேரவைத் தலைவர் பக்தவச்சலம், திருக்கழுக்குன்ற ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஆகியோர் கருங்குழி சாலையில் அமைந்திருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் வெண்கல சிலைக்கு சேலம் மாவட்ட அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அஇதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உதகையில் நகரச் செயலாளர் சண்முகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், அதிமுக செய்தித் தொடர்பாளரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளருமான குறளார் கோபிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆ சிலைக்கு அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை வேட்டவலம் சாலையிலுள்ள எம்ஜிஆர் படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பீரங்கி வெங்கடேசன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்
திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மத்திய பேருந்து நிலையம் முன் உள்ள எம்ஜிஆரின் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "எம்ஜிஆரை போல மனிதாபிமானமிக்க தலைவரை யாரும் பார்த்திருக்க முடியாது. கடும் நிதி நெருக்கடியிலும் உலகத்திற்கே முன்னோடியான சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர். நடிகர் நாடாள முடியும், ஆளுமைமிக்கத் தலைவராக உருவாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் எம்ஜிஆர்தான்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒரு வரலாற்று மைல்கல்’ - திருமாவளவன்