தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பெருமளவில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கரோனா நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அரசு அலுவலர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குமரி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜாராம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், “தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் பெருமளவில் கட்டுப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசின் மீது நற்பெயர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு பொதுமக்களிடையே களங்கம் விளைவிக்கும் வகையில் வார பத்திரிகை ஒன்று, தமிழ்நாடு முதலமைச்சரையும் அமைச்சர்களையும் காவல் துறையினரையும் அரசு ஊழியர்களையும் தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் மீது அவதூறு பரப்பிய பத்திரிகை நிர்வாகத்தின் மீதும் செய்தி வெளியிட்ட ஆசிரியர், செய்தியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்திட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.