கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் இக் கோவில் திகழ்கிறது.
இந்த கோயிலில் கும்பாபிஷகம் நடந்து சுமார் 450 ஆண்டுகளாகிறது. எனவே, கொடிமரம் பிரதிஷ்டை, புனரமைப்பு பணிகள் நடத்தி கோவில் கும்பாபிஷகம் நடத்திட இந்து சமய அறநிலையத்துறையும், பக்தர்கள் சங்கமும் முடிவு செய்து பணிகளை தொடங்கினர். அதன்படி, இங்கு 2007 ஆம் ஆண்டு முதல் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக கோவிலில் புதிய கொடிமரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலிருந்து 72 அடி நீள தேக்கு மரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் பணிகள் நடைபெற்றது. பின்னர், 69.8 அடி நீள கொடி மரமாக அந்த தேக்கு மரம் மெருக்கேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று(ஜன-25) இரண்டு ராட்சத கிரெயின் மூலம் கொடி மரம் பிரதிஷ்டை நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடிமரம் பிரதிஷ்டைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்கு மகா கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.