கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமான அளவில் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளன. இந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில், சாலைகளை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பல்வேறு உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது" எனக் கூறினர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது