கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை(Annamalai) கலந்து கொண்டார். மேலும், இந்த பொதுக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்த பொதுக்கூட்டம் உத்வேகமாக இருக்கும் என கட்சியில் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் நாகர்கோவில் மாநகராட்சியின் 24ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி.
இந்தப் பகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ரோஸிட்டா. அவருக்கு பொதுக்கூட்ட மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அணிவிப்பதற்காக ஆள் உயர ரோஜா பூ மாலை, மலர் கிரீடம் மற்றும் மலரில் செய்யப்பட்ட செங்கோல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அண்ணாமலைக்கு ஆள் உயர மாலை அணிவிக்க அனுமதி இல்லை எனக் கூறி மறுத்திருக்கிறார்கள்.
மேலும், ரோஸிட்டாவிற்கு மேடையில் இடமும் கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சில பா.ஜ.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அந்த மாலையை அணிவித்தனர். இது கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் 24ஆவது வார்டு கவுன்சிலரும், பாஜக கட்சியில் கிழக்கு மண்டல மகளிர் அணி துணைத் தலைவருமான ரோஸிட்டா மற்றும் நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளராக பாஜக கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் ரோஸிட்டாவின் கணவர் திருமால் ஆகியோர், தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் மற்றும் மாவட்டத் தலைவர் தர்மராஜுக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதேபோல பாஜகவில் முக்கியப்பொறுப்பில் இருக்கும் சில நிர்வாகிகளும் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளதாகத் தகவல்கள் பரவியுள்ளன. இந்த நிகழ்வு, பாரதிய ஜனதா கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: BJP Executive Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!