கன்னியாகுமரி : குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டத்திற்கு மகளிர் கட்டணமில்லா அரசுப் பேருந்து ஒன்று சென்று உள்ளது. திருவட்டார் அடுத்த புலியிறங்கி பகுதி பேருந்து நிறுத்தம் அருகே வந்த ஓட்டுநர், நிறுத்தத்தில் அதிகளவில் பெண்கள் இருப்பதை கண்டு பேருந்தை நிறுத்துவது போல் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
பேருந்து நிற்பதாக எண்ணி பெண் ஒருவர் ஏற முயன்றதாகவும், திடீரென பேருந்து கிளம்பியதால் படிக்கட்டில் கால் வைத்த பெண் இடறி சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இருப்பினும் காயம் அடைந்த பெண் பயணியைக் கண்டு கொள்ளாமல் ஓட்டுநர் பேருந்து இயக்க முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பேருந்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து காயம் அடைந்த பெண் ஆசிரியை கூறியதாவது, தமிழக அரசு பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பேருந்துகள் நிறுத்தத்தில் பெண்கள் நிறுத்தினால் நிற்காமல் செல்வதும், பெண் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதும் வாடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இலவசப் பேருந்துகளை தாங்கள் கேட்கவில்லை என்று கூறிய பெண் ஆசிரியை, முறையாக நிறுத்தத்தில் நிற்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிப்பேருந்தை நிறுத்தி ஓட்டுநர்கள் தங்களை அலைக்கழித்து வஞ்சிப்பதாக வேதனைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூகுளில் அறிமுகமான புது மாற்றம்... நீங்க பார்த்தீங்களா?