கன்னியாகுமரி: புதுக்கடை அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(29). இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்ற இளம் பெண்ணை வேலைக்கு செல்லும் போது காதலித்து கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கவிதா கடையாலுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். கண்ணன் மது குடித்து வந்து கவிதாவிடம் பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். அவரது தாயாரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை தாங்கி கொள்ள முடியாத கவிதா தான் வேலை பார்த்து வந்த கடையாலுமூடு பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியுள்ளார். இந்நிலையில் தினமும் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு அங்கு வரும் கண்ணன், கவிதாவின் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர் பல முறை எச்சரித்தும் பொருட்படுத்தாமல் கண்ணன் தொடர்ச்சியாக ரகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கவிதாவை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.
இரண்டு மாத கர்பமாக இருக்கும் நிலையில் கவிதாவை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கண்ணன் வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்த கவிதா, ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு சிறிது காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி ஆழ் கடலில் பலத்த சூறைக்காற்று- கரை திரும்பும் மீனவர்கள்