தூத்துக்குடி மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நகை வியாபாரி வீட்டில் புகுந்த வட மாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் தாய், மகனை கழுத்தறுத்து கொலைசெய்ததோடு அங்கிருந்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர், துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினர், கொள்ளையர்களில் ஒருவரை என்கவுன்டர் செய்ததோடு மூன்று பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்த நகைகளை மீட்டனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை அடுத்த காஞ்சிரவிளை பகுதியைச் சேர்ந்த நிர்மல் (35) என்பவர் முதலமைச்சர் பார்வைக்காக குறிப்பிட்டு காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், கையில் வெட்டு கத்தி, தென்னை மட்டையுடன் இருந்த அந்த இளைஞர், “சீர்காழி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை மெரினா பீச்சுக்கு அழைத்துச் சென்று எல்லா மக்களுக்கும் முன்னிலையில் அவர்களது இரண்டு கைகளையும் துண்டுத்துண்டாக வெட்டி பத்து அடியில் கம்பு நாட்டி தொங்கவிட்டு கொல்ல வேண்டும்.
இதனைப் பார்க்கும் மற்ற கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப் பயப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார். வெட்டுக் கத்தியை வைத்து அகோரமாக தென்னைமட்டையை வெட்டி காட்டியதோடு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மனிதாபிமான அடிப்படையில் தண்டனை குறைப்பதால் தமிழ்நாட்டில் திருடர்கள் கூடிக்கொண்டே இருப்பார்கள் என்றும் தயவு செய்து இந்த முறையை செயல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதனையறிந்து இரணியல் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பணத்தாசையில் நடைபெற்ற சீர்காழி சம்பவம்; விவரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்