கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மது குடிப்பவர்கள் மது கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். கேரளாவில் மது கிடைக்காமல் பலர் தற்கொலை செய்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பொய்கை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (41). கூலித்தொழிலாளியான இவருக்கு நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. தினசரி மது அருந்தாமல் இவரால் செயல்பட முடியாது என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது குமரி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் வேலு சிரமப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சில நாள்களாகவே மன நலம் பாதித்தவர் போல் நடந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் அமைந்துள்ள பூஜை அறையில் நேற்று நள்ளிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் வேலு உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலு குடிப்பதற்கு மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.