கன்னியாகுமரி: நாகர்கோவில் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாந்திரிகம் பார்ப்பதற்காக நாகர்கோவில் வடசேரி கலுங்கடி பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன்(வயது 35) என்பவரை அணுகியுள்ளார்.
மந்திரவாதி மணிகண்டன், கூலித் தொழிலாளி வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் தொடர்ந்து பலமுறை மணிகண்டன் சம்பந்தப்பட்டவர் தொழிலாளி வீட்டிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதே போன்று மணிகண்டன் சென்ற போது, வீட்டில் 13 வயதுடைய மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அச்சிறுமியிடம் பேசிய மணிகண்டன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்த நிலையில், பெற்றோர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல்துறை சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதோடு குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனையும் கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதியப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள்