கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வின்சி (22) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்குப் பின்பு சுந்தர்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும் மனைவியிடம் வரதட்சணையாக கூடுதல் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்தார். மேலும், குடும்பத்தை கவனிக்காமல் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாகவும் தெரிகிறது.
இதனால் சுந்தர்ராஜை விட்டு பிரிந்து வின்சி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அங்கிருந்தவாறு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்த பிறகும் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
சுந்தர்ராஜ் பலமுறை வின்சியை அழைத்தும் வீட்டிற்கு வராததால் அவரை கொல்ல திட்டமிட்டார். இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 7 மணியளவில் வின்சியின் பெற்றோர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதவை உட்புறமாக தாழிட்டார். பின்னர், வீட்டினுள் இருந்த வின்சியை கைகளால் கழுத்தை பிடித்து நெறித்து மூச்சுத் திணறடித்து கொலை செய்து, பின்வாசல் வழியாக ஓடி தலைமறைவானார்.
இதையடுத்து அவரை கைது செய்த தக்கலை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தற்போதுவரை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன் வரதட்சணை கொடுமை செய்து மனைவியை படுகொலை செய்த சுந்தர்ராஜுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: இளம்பெண் தற்கொலை: திருமணம் செய்ய வற்புறுத்திய ராணுவ வீரர் கைது!