கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த செட்டித்தெருப் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (29). இவர் நேற்றிரவு (மே.7) மது அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் சாலையில் நின்று குடி போதையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காவல்துறை வாகனம் ஒன்று வந்தது.
இதைப் பார்த்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில், ராகேஷ் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டை நோக்கி ஓடினார். அந்த வீட்டின் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கேட்டின் மேல்புறமாக கையைவிட்டு பூட்டை திறக்க முயற்சித்தபோது, வீட்டின் மேல்பகுதியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கூர்மையான இரும்பு கம்பி ராகேஷின் சட்டையைக் கிழித்துக்கொண்டு அவரது விலா பகுதிக்குள் நுழைந்தது.
கம்பி ஆழமாக விலாவைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்றதால், வலி தாங்க முடியாமல் துடித்த ராகேஷ் சத்தம்போட்டு அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை கம்பியில் இருந்து மீட்க முயன்றனர். ஆனால், இரும்பு கம்பி விலாவுக்கு இடையிலுள்ள எலும்புகளுடன் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் கேஸ் கட்டர் மூலம் இரும்புக் கம்பியை வெட்டி அகற்றினர். பின்னர் விலாவில் இரும்புக்கம்பி சிக்கிய நிலையில் இருந்த ராகேஷை, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து விலா எலும்பில் சிக்கியிருந்த இரும்புக் கம்பியை அகற்றினர். தற்போது ராகேஷ் பூரண நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறைக்குப் பயந்து கேட்டில் சிக்கி தொங்கிய இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'ஆலையில் இருந்து விஷ வாயு வெளியானால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?'