கன்னியாகுமரி: குமரி மாவட்டம், முகிலன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முரளிதன். எம்.இ, பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த 36 வயதான சைலஜா என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து, இந்த தம்பதியருக்கு 7 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்த தம்பதியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் தக்கலை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியது குறிப்பிடத்தக்கது.
பின் முரளிதரன் ஐடி கம்பெனி பணியை விட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காலை, மாலை என தனது மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவரது தந்தை கோபால் வழக்கம் போல் சனிக்கிழமை மாலை வீட்டிற்குச் சென்றபோது கதவு பூட்டி இருந்ததால் சத்தமிட்டு அழைத்துள்ளார்.
அதிக நேரமாகியும் கதவு திறக்காத நிலையில், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கதினரின் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் தற்கொலை செய்த நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் இறந்த நிலையிலும், பேரன் ஜீவா கொலை செய்யப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாகவும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எம்.இ.; பி.எல் முடித்து பெங்களூருவில் ஐடி கம்பெனியில் பணியாற்றிய முரளிதரன் மனைவி சைலஜாவுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடி பெயர்ந்து உள்ளனர்.
தற்போது பி.எல். படித்திருந்த அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். முரளிதரன், சைலஜா தம்பதியருக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையில், தங்களது ஒரே ஆசை மகனும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணம் இருந்தும் பாச மகனின் நோயைத் தீர்க்க முடியாத அவர்கள் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் தனது மகன் ஜீவாவை கொலை செய்து கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலிலும், சைலஜா மகன் இறந்த அதே அறையிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகன் தீராத ஆட்டிசம் குறைபாடு காரணமாக மனமுடைந்த வழக்கறிஞர் மகனையும் கொன்று மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டிசம் என்பது நோய் அல்ல; உடலில் ஏற்படும் ஒரு வித குறைபாடு தான்; அதற்காக இது போன்ற விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலாளியை சரமாரியாக தாக்கிய ஸ்விக்கி ஊழியர்கள்! கேள்வி கேட்டதால் நடந்த கொடூரம்..