கன்னியாகுமரி: ஆற்றூர் சித்தன் விளையைச் சேர்ந்தவர்கள் சோம்ராஜ் - சித்ரா தம்பதி. இவர்களுக்கு ஆதிரா என்ற திருமணமான மகளும், அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்.03) இரவு மழை பெய்து கொண்டிருக்கும்போது அஸ்வின் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றதாகத் தெரிகிறது.
அப்போது இவர்களின் வீட்டின் அருகில் உள்ள தாமஸ் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மின்விளக்கின் ஒயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியது. இதனைக் கண்ட தாய் சித்ரா மகனை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எட்டு மாத கர்ப்பிணியான ஆதிரா இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சார தாக்குதலுக்கு ஆளானானர்.
ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர். மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் யாரும் இதனைக் கவனிக்காத நிலையில் அந்தப் பகுதியிலே உயிரிழந்து கிடந்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகே இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் ஓட்டுநர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள் ஆதிரா (வயது 23) மற்றும் மகன் அஸ்வின் (வயது 19) ஆகிய மூவரும் அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூக்கை அறுப்பேன் என மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி; அட்டை கம்பெனி தொழிலாளி தற்கொலை!