கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதிக்கு புத்தேரி மார்க்கமாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 26) மதியம் தாழக்குடி சென்ற பேருந்து அங்கிருந்து நாகர்கோவிலுக்கு இறச்சகுளம், புத்தேரி மார்க்கமாக வந்துள்ளது.
இந்தப் பேருந்தினை டிரைவர் கிரீசன் தம்பி என்பவர் இயக்கியுள்ளார். அப்போது புத்தேரி பகுதியில் வரும் போது ஓட்டுநர் கிரீசன் தம்பியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வளைவில் ரோட்டோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த வேகத்தில் தலைகீழாக மூன்று முறை புரண்டு நிமிர்ந்துள்ளது. இதில் ஓட்டுநர் கிரீசன் தம்பி, நடத்துனர் பால சுப்பிரமணியன் உட்பட 25-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பலத்த காயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த வடசேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர் காந்தி விபத்து நடந்த பகுதியில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.