நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் திருமணம் மற்றும் நிலம் சம்பந்தமான தரகர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சொகுசு கார் ஒன்றில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணகுடி வந்தது. அவர்கள் கந்தசாமியை தொடர்பு கொண்டு எங்கள் வீட்டில் உள்ள மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க வேண்டும். இது சம்பந்தமாக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு சென்று, நீங்கள்தான் பேசி முடிக்க வேண்டும் என ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றனர்.
பின்னர் அஞ்சுகிராமம் சென்றவுடன் கடமைக்காக ஏதோ ஒரு வீட்டில் அவரை கூட்டி சென்று பெண் பார்த்தனர். பின்னர் பெண் பிடிக்கவில்லை வேறு சம்பந்தம் பார்த்துக் கொள்ளலாம் என கூறி அங்கிருந்து புறப்பட்டனர். ஊருக்கு செல்லும் வழியில் கந்தசாமிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து கௌரவமான முறையில் அவரை மீண்டும் பணகுடியில் இறக்கி விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.22) மீண்டும் அந்த அடையாளம் தெரியாத கும்பல் கந்தசாமியை தொடர்புகொண்டு காவல்கிணறு பகுதியில் ஒரு பெண் வீடு இருக்கிறது. எனவே அதை பார்த்து பேசி முடிக்கலாம் வாருங்கள் என அழைத்தனர். கந்தசாமியும் மிகவும் உற்சாகமாக சென்றார். கந்தசாமி தொழில் சம்பந்தமாக வெளியே செல்லும்போது செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை அணிந்து செல்வது வழக்கம்.
இதனிடையே அவரை காரில் ஏற்றிய அந்த கும்பல் சிறிது தூரம் சென்றதும் மது, சாப்பாடு வாங்கி கொடுத்தனர். பின்னர் மது போதையில் இருந்தவரிடம் நகைகளை கழற்றி தருமாறு வற்புறுத்தினர். இதற்கு கந்தசாமி மறுத்ததால், ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் குத்தியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறிய கந்தசாமி தனது செயின், மோதிரம் உள்ளிட்ட சுமார் 23 சவரன் தங்க நகைகளை கழற்றி கொடுத்தார்.
நகையை வாங்கிக் கொண்ட அந்த கும்பல் ஆரல்வாய்மொழி அருகில் ஒரு முட்புதரில் அவரை தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. இந்நிலையில், இன்று (ஜனவரி 23) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரில் முதியவர் ஒருவர் கிடப்பதை பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர், முதியவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வருவாய் துறை விசாரணையில் ஆள்மாறாட்டம் உறுதி!