கன்னியாகுமரி: குமரியில் 200 கிலோ கஞ்சாவைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருமனை அருகே அண்டுகோடு மயில்லட்சி பகுதியில் சந்தேகப்படும்படியாக டெம்போ ஒன்று நின்று கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அருமனை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த டெம்போவை சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அதற்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது. டெம்போவில் இருந்த 200 கிலோ கஞ்சாவைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கேரளாவிலிருந்து தான் கஞ்சாவைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.