கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், காவல் துறையினர் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், கொலைசெய்யப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி, அவர்கள் வைத்திருந்த கைப்பை ஆகியவை கேரளா மாநிலத்தில் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமையுடன் அவர்களுக்கான காவல் முடிவடைந்த நிலையில், கைதுசெய்த இருவரையும் நாகர்கோவில் முதன்மை நீதிமன்றத்தில் 50 பக்க ஆவணங்களுடன் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள்முருகன், இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் அடுத்த மாதம் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.