காஞ்சிபுரம்: வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்குடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (27). திருமணமாகாத இவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் தம்பி, தங்கைகளுடன் வசித்து வந்தார். கஞ்சா போதைக்கு அடிமையானதாகக் கூறப்படும் அஜித், தன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்கி விற்பது, அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அஜித் மீது வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் கஞ்சா போதையில் அஜித் உள்ளே நுழைந்து தகராறு செய்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தை வாலாஜாபாத் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ‘ஊருக்குள் பல கொலைகளை செய்துவிட்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் என்னைப் போய் பிடிக்கலாமா’ என போதையில் அஜித் உளறியிருக்கிறார். அஜித்திடம் காவல் துறையினர் நடத்திய மேல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அவர் அளித்த தகவலை அடுத்து பல மாதங்களுக்கு முன்பு காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நபர் ஏரியில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில் சடலமாக காவல் துறையினரால் மீட்டெடுக்கப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்ட அஜித் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனையடுத்து, வாலாஜாபாத் காவல் துறையினர் அஜித்தைத் தேடி வந்தனர். இந்நிலையில், காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த அஜித் என்ற இளைஞர் சடலமாக கிடப்பதாக வாலாஜாபாத் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும், தலை ஒரு பகுதிகளும், உடல் ஒரு பகுதியிலும் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வாலாஜாபாத் காவல் துறையினர், அஜித்தின் தலை மற்றும் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நேற்று நள்ளிரவு (செப்.08) சுமார் 11.30 மணி அளவில் அஜித்தை அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கை, கால்களை கட்டிப் போட்டு படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், சடலத்தை வள்ளுவப்பாக்கம் காலனி பகுதியிலும், தலையை வெட்டி அதனை தாங்கி பகுதியிலும் என வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு கொலை கும்பல் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் திமுக நிர்வாகி மீது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி துப்பாக்கிச் சூடு!