காஞ்சிபுரம் அருகே செட்டியார்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர், ஏழுமலை - பரமேஷ்வரி தம்பதியர். இவர்களுக்கு மணிகண்டன், யுவராஜ், வெங்கடேசன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் மூன்றாம் மகனான வெங்கடேசன்(26), ஆட்டோ ஓட்டுநராக இருந்துவருகிறார்.
சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர் அண்மையில், அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் வெங்கடேசனை அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் வெங்கடேசனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் தனது நண்பர்களான, சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ், சக்தி மற்றும் கலர் கோழி குஞ்சு ஆகியோருடன் இணைந்து கொண்டு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளை கேட் என்ற பகுதியில் இயங்கி வரும் பஞ்சாபி தாபா ஹோட்டலுக்கு, மது அருந்திவிட்டு உணவு சாப்பிடச் சென்றுள்ளனர்.
அப்பொழுது, அந்த ஹோட்டலின் உரிமையாளர் குட்டி என்கிற லோகநாதன் என்பவருடன், உணவு சீக்கிரமாக வரவில்லை என இவர்கள் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது வெங்கடேசன், ஹோட்டல் உரிமையாளர் குட்டியை பின்புறமாக பிடித்துக்கொண்டு, தனது நண்பரான காக்கா சுரேஷிடம், இவனைக் கத்தியால் குத்தி விடு எனக்கூற காக்கா சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தும் போது, ஹோட்டல் உரிமையாளர் குட்டி விலகவே, எதிர்பாராத விதமாக வெங்கடேசனின் நடுநெஞ்சியில் கத்தி இறங்கியுள்ளது. இதனையடுத்து நண்பர்கள் காக்கா சுரேஷ், சக்தி ஆகியோர் வெங்கடேசனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ்யை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நண்பனை கொலை செய்ய முயற்சி...இளைஞர் கைது