காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில் நிறுவனங்களில் பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு வடமாநில இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்று வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெமிலி பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, மாதா கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒடிசாவை சேர்ந்த ரன்னித் நாத் (34) என்பவனிடமிருந்து 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
பின்னர் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வரும் லாரிகள் மூலம் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து, இங்குள்ள இளைஞர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து வட மாநில இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வர முக்கிய புள்ளியாக விளங்கி வரும் தலைமறைவு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்ற 4 பேருக்கு சிறைத்தண்டனை!