காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், தனது நண்பரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.
தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒய்.ஜி.மகேந்திரன்,”கூடிய சீக்கிரம் நம்மை சுற்றி இருக்கும் கரோனா என்ற நோய்த்தொற்று தொல்லை ஒழிந்து எல்லோரும் சாதாரண நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுதல்.
நடிகர்களாக இருக்கட்டும், தொழிலதிபர்களாக இருக்கட்டும், பாமர மக்களாக இருக்கட்டும், எல்லோருமே என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் வெறுத்துப் போயிருக்கிறார்கள். அதெல்லாம் பக்தி, கடவுள் அருள் இருந்தால்தான் சரியாகும்.
இந்த நாட்டில் என்றைக்கும், அதுவும் இந்திய திருநாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது. அந்த பக்தி மேலும் மேலும் வளரும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடியாக ஆகும் என்பது என்னுடைய நம்பிக்கை. முக்கியமாக உலக நன்மைக்காக வேண்டவே வந்தேன்”என்றார்.
இதையும் படிங்க: லதா ரஜினிகாந்த் வாழ்த்து: மகிழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா