காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் இரண்டாவது முறையாக போட்டியிடவுள்ளார். இவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தேமுதிக, பாஜக, புரட்சி பாரதம், பல்வேறு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும், செயல்வீரர்களும் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சமூகநலத் துறை அமைச்சரும் அதிமுக மகளிர் அணி அமைப்பாளருமான வளர்மதி கலந்துகொண்டார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய வளர்மதி, "தற்போது அதிமுக கூட்டணி ஒருமித்த கருத்துடன் அமைக்கப்பட்டு யானை பலம் கொண்ட கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் அனைவரும் வீழ்வது உறுதி.
அதிமுக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனால் திமுக கூட்டணியை வீழ்த்துவது என வீர சபதம் எடுத்துள்ளோம்.
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் முன்னுக்குப் பின்னாக கருத்துகளைக் கூறியும் தனிப்பட்ட கொள்கைகள் உடையவர்களாகவும் உள்ளதால் வெற்றி பெறுவது இயலாத காரியமாகும்" என கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி மாவட்டச் செயலாளர்கள், அதிமுக முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி திருநாவுக்கரசு ஒன்றிய பேரூர் செயலாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.