காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்குவாரிகளிலிருந்து கிடைக்கும் ஜல்லி, எம் சாண்ட் ஆகியவை சாலவாக்கம் முதல் பழைய சீவரம் வரை உள்ள சாலைகளின் வழியாகதான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வழிகளில் கனரக லாரிகள் அவ்வப்போது செல்வது அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனரக வாகனங்கள் போக்குவரத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி கனரக வாகனங்களால் நிகழும் விபத்துகளும் அதிகமாகியுள்ளன. இரண்டு வாரத்திற்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கல் குவாரிகளுக்கு அனுமதியக்கக்கூடாது, கிராமப்புறங்கள் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளுடனும், அவற்றுக்கு அனுமதி அளித்து வரும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர், திருமுக்கூடல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.